லஞ்சம் தவிர்.............................................. நெஞ்சம் நிமிர்

லஞ்சம் வாங்க மறு ........லஞ்சம்கொடுக்க மறு ........ நெஞ்சம் நிமிர்ந்து நில்

மகாத்மா காந்தி பொது சேவை மையம் சார்பில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக செயல்படுபவர்களுக்கு சிறந்த ஊழியர் களுக்கு சமூக காந்தி என்ற விருதினை வழங்க உள்ளோம்
தொடர்புக்கு 94 898 74 0 75 - 944 32 85 884

லஞ்சத்திற்கு எதிராக குரல் கொடுப்போர் எங்கள் அமைப்பில் இணைந்து செயல்பட அன்புடன் அழைக்கின்றோம்.

வெள்ளி, 11 மார்ச், 2011

ஜனவரியில், 8 ம் தேதி இன்று ஆம்புலன்ஸ் தினமாக

உயிருக்கு போராடும் நோயாளியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ் இன்று (ஜன.8) முதலுதவி சிகிச்சை, உயிர் காக்கும் மருந்துகள் என "மினி மொபைல் ஆஸ்பத்திரி'யாக வலம் வருகிறது.



இந்த ஆம்புலன்ஸ் உருவான வரலாறு 17ம் நூற்றாண்டில் துவங்குகிறது. அந்த காலக்கட்டத்தில் காயம்பட்ட போர் வீரர்களை சிகிச்சை மையத்திற்கு எடுத்துச் செல்ல, இரு மூங்கில் கம்புகளில் இணைக்கப்பட்ட துணியை (ஸ்டிரெச்சர்) பயன்படுத்தினர். இதுதான் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உருவாகுவதற்கான கரு எனலாம். பின், குதிரை வண்டி, மோட்டார் வாகன வண்டி ஆம்புலன்ஸ் என பல பரிமாணங்களை பெற்றன. கி.பி. 18ம் நூற்றாண்டில் தான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. மகாத்மா காந்தி கூட, தென்னாப்பிரிக்காவில் "இந்தியன் ஆம்புலன்ஸ் கிராப்ஸ்' என்ற நிறுவனத்தை துவக்கி, ஸ்டிரெச்சர் தூக்கும் ஊழியராகவும் இருந்தார். இந்தியாவில் முதன்முறையாக 1914ல் மும்பையில் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.




ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை, பணம் கொடுத்து அழைத்துச் செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ், 2005 ஆகஸ்ட்டில் "108' என்ற பெயரில், இலவச ஆம்புலன்ஸ் திட்டமாக, ஆந்திராவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 3000 ஆம்புலன்ஸ்கள் இலவச சேவையில் ஈடுபட்டுள்ளன. அவசர கால மேலாண்மை ஆராய்ச்சி மையம் இதை நிர்வகிக்கிறது. இடத்தின் தன்மைக்கு ஏற்ப, "108' ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்படுகிறது. நீர்நிலைகள் அதிகமுள்ள அசாமில் படகையே ஆம்புலன்சாக மாற்றி உள்ளனர். மலைப்பகுதியான உத்தரகாண்ட் மாநிலத்தில், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. "108'ஐ குறிக்கும் வகையில், ஆண்டின் முதல் மாதமான இந்த ஜனவரியில், 8 ம் தேதியான இன்று ஆம்புலன்ஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

மகாத்மா காந்தி சேவை மையத்தில் அமைந்த நியூஜெர்சி இந்துக்கோயில்

தலவரலாறு : அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் அமைந்துள்ள இந்திய கலாச்சார சங்கம் 1973 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ம் தேதி உருவாக்கப்பட்டது. இம்மாகாணத்தில் அமைக்கப்பட்ட இந்தியர்களின் முதல் லாப நோக்கமற்ற மையமாகும். இம்மையம் ஆசிய இந்திய அங்கீகார மையத்தின் மூலம் நியூஜெர்சி பகுதியில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் 1994 ம் ஆண்டு வரை இக்கோயிலின் சார்பில் சமூக சேவைகள், கலாச்சார நிகழ்வுகள் போன்ற பொது நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இது போன்ற சமூக நல நிகழ்வுகளுக்காக மகாத்மா காந்தி மையமும் அமைக்கப்பட்டது. இப்பகுதியில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் பொது நல தொண்டுகளுக்காக மகாத்மா காந்தி அமைப்பும் வழிபாட்டிற்காக இந்துக் கோயில் ஒன்றும் அமைக்கப்பட்டது. ராம கதைகள் அடங்கிய சொற்பொழிவுகளின் மூலம் வடக்கு நியூஜெர்சி பகுதியில் மகாத்மா அமைப்பின் மூலம் இந்தியர்களுக்கு தகுந்த அங்கீகாரம் பெற்றுத் தந்தவர் முராரி பாபு என்பவர் ஆவார். இதன் மூலம் இந்த அமைப்பு ஓர் நிரந்தர அமைப்பாகவும் தோற்றம் பெற்றது. 


தினசரி பூஜைகள் : தினமும் இரவு 7.30 மணிக்கு ஆரத்தி மற்றும் பஜனைகள் நடைபெறுகின்றன. திங்கட்கிழமை : சிவ அபிஷேகம் மற்றும் பாராயணத்துடனான சிவ மஹினஹ ஸ்தோத்திரம் செவ்வாய்கிழமை : ஹனுமன் மந்திரம் மற்றும் பாராயணம் 

வியாழக்கிழமை : ஷீரடி சாய்பாபா பஜனை
பவுர்ணமி நாட்கள் : சத்யநாராயண பூஜை மற்றும் பாராயணங்கள்
கோயில் முகவரி :
India Cultural Society Hindu Temple & Mahatma Gandhi Center
714 Preakness Ave,
Wayne, NJ 07470
தொலைப்பேசி : 973-595-7117
இணையதளம் : www.gandhicenter.org

கக்கனை அவமானப்படுத்திய

கக்கனை அவமானப்படுத்திய
ஞ்சம், நேர்மையின்மை, செயலற்ற தன்மை, சுயநலம்… இவைதான் இன்றைக்கு அரசியல்வாதிக்குரிய பொதுவான இலக்கணமாகிவிட்டது.
ஆனால் இவற்றுக்கெல்லாம் நேர்மாறாக வாழ்ந்த சில தலைவர்களும் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இருந்திருக்கிறார்கள்.p071299d
அப்படிப்பட்ட நல்ல தலைவர்களில் ஒருவர் பெருந்தலைவர் காமராஜர். அவரது வழியில் நடைபோட்ட இன்னொரு தலைவர் கக்கன்.
அப்பழுக்கற்ற, எளிமையான தூய அரசியல்வாதியாக திகழ்ந்து மறைந்த கக்கனின் நூறாவது பிறந்த நாள் விழா நேற்று சத்யமூர்த்தி பவனில் ‘கொண்டாடப்பட்டது’.
அந்த உண்மையான தலைவருக்கு அஞ்சலி செலுத்த, அதுவும் நூற்றாண்டு விழாவுக்கு வந்திருந்த காங்கிரஸ்காரர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா… வெறும் பத்துபேர்! இந்த பத்துக்குள்ளேயே சில முக்கிய விஐபிக்களும் அடக்கம்!!
ஒரு நேர்மையாளரை, ஏழைப் பங்காளரை இதைவிட மோசமாக அவமதிக்க முடியுமா… தெரியவில்லை. இன்றைய காங்கிரஸுக்கும் நேர்மைக்கும் உள்ள நெருக்கம் அப்படி!
நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி, தேசப் பற்று மிக்க ஒரே கட்சி, நூறாண்டுகள் கடந்த கட்சி என்றெல்லாம் காங்கிரஸ்காரர்கள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வாய் கிழியப் பேசுவார்கள்.
கதர்ச் சட்டையுடன் காணப்படும் அவர்கள் தங்களது அரும் பெறும் வரலாற்றுப் பாதையை அப்படியே மறந்து போனவர்கள் என்பதை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டுதான் உள்ளனர்.
குறிப்பாக சுதந்திரப் போராட்ட தியாகிகளை ஒருபோதும் காங்கிரஸ் கெளரவித்ததில்லை என்பது வரலாறு. மாறாக திராவிடக் கட்சிகளின் ஆட்சியின்போதுதான் பல தியாகிகளுக்கு புனர்வாழ்வு கிடைத்தது, உரிய கெளரவம் கிடைத்தது. குறிப்பாக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சியில்தான் பல காங்கிரஸ் தலைவர்கள் நியாயமான மரியாதையை, அங்கீகாரத்தைப் பெற்றார்கள்.
சில நாட்களுக்கு முன்பு வீர வாஞ்சிநாதனின் நினைவு தினம் வந்தது. காங்கிரஸ்காரர்கள் யாரும் அந்த நாளில் அஞ்சலி செலுத்தியதாகக் கூட நினைவில்லை.
கர்மவீரரின் வழியில் கக்கன்…
இப்போது கக்கனின் பிறந்த நாள் நூற்றாண்டின்போதும் அவரை அவமதித்துள்ளது காங்கிரஸ்.
மறைந்த கக்கனுக்கு நேற்று 100வது பிறந்த நாள். இவர் பெருந்தலைவர் காமராஜர் அமைச்சரவையில் இருந்தவர். ஊழல் என்றால் ‘அப்படின்னா என்ன?’ எவ்வளவு என்று கேட்கக் கூடிய நேர்மையாளர்.
அப்படிப்பட்ட சிறப்புக்குரிய கக்கனின் ஒரு போட்டோவை வைத்து வெறும் பத்து பேரே கூடி மலர் தூவி அஞ்சலி செலுத்தி விட்டு உடனடியாக அந்த போட்டோவையும் அப்புறப்படுத்தி,  அந்த மனிதரை அசிங்கப்படுத்தியுள்ளனர்.
இன்றைக்கு ஒரு வார்டு கவுன்சிலரே ஸ்கார்ப்பியோவில் பறக்கிறார்கள். ஆனால் பதவியிலிருந்த போதும், பதவியில் இல்லாதபோதும் அரசு பேருந்தில்தான் எங்கும் செல்வார் கக்கன். எந்தக் காரியமாக இருந்தாலும் சரியான விதிகளை அனுசரித்து செய்யக் கூடியவர். தனக்காகவோ கட்சிக்காகவோ ஒரு பைசா கூட யாரிடமும் பெற்றதில்லை கக்கன். எல்லாவற்றுக்கும் மேலாக தலித் வகுப்பைச் சேர்ந்தவர். தன் அப்பழுக்கற்ற குணத்தால், நேர்மையால் அந்த இனத்துக்கே உயர்வைத் தந்தவர்.
கக்கன் உயிருடன் இருந்தபோதே அவரை மறந்து போன கட்சிதான் காங்கிரஸ். ஏழ்மையில் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் அவர் வாடியபோது அமரர் எம்.ஜி.ஆர்.தான் உதவிக் கரம் நீட்டினார். கக்கனை உரிய முறையில் பாதுகாத்தார்.
பின்னர் அவர் மறைந்தவுடன், கக்கனுக்கு மணிமண்டபம் கட்டி கவுரவம் தந்தவர் இப்போதைய முதல்வர் கருணாநிதி.
தேசத்தின் சொத்தாக மதிக்கப்பட வேண்டிய கக்கனின் நூறாவது பிறந்த நாளை எவ்வளவு சிறப்பாக கொண்டாடியிருக்க வேண்டும் காங்கிரஸ்?
காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு கோஷ்டித் தலைவர்களின் பிறந்த நாளின்போது கூட கட்சி அலுவலகமே அமர்க்களப்படும். ஏன், மத்திய அமைச்சராக பதவியேற்றவுடன் கோஷ்டித் தலைவர்கள் கட்சித் தலைமையகத்திற்கு வந்தால் ஏதோ போரில் வென்ற மாவீரர்களுக்குக் கொடுக்கப்படுவதைப் போல தடபுடலாக வரவேற்பு அளித்து ஊரையேக் கலக்குவார்கள்.
ஆனால் கக்கனுக்கு மரியாதை செலுத்த தங்கபாலு, சுதர்சனம், கராத்தே தியாகராஜன், தாமோதரன் என வெறும் 10 பேர் மட்டுமே வந்திருந்தனர். இவ்வளவுதானா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தொண்டர் பலம்… இவர்களின் தொண்டரடிப் பொடிகள் குறைந்தபட்சம் வந்திருந்தால்கூட 100 பேராவது தேறியிருப்பார்களே… இதையெல்லாம் விட மிகக் கொடுமை – அந்த பத்து பேரும் மலர் தூவி முடித்த பின்னர் போட்டோவை உள்ளே எடுத்துச் சென்று விட்டனர்.
பிறந்த நாள் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்த கக்கனின் மகள் கஸ்தூரி சற்று தாமதமாக வந்தார். அவர் வந்தபோது போட்டோவைக் காணவில்லை. இதையடுத்து அலுவலகத்திற்குள் சென்று தனது தந்தையின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி விட்டுச் சென்றார் கஸ்தூரி.
காமராஜர் ஆட்சி, காமராஜர் ஆட்சி என்று வாய் கிழியப் பேசி வருகிறது காங்கிரஸ். ஆனால் காமராஜர் மற்றும் அவருடன் இருந்த கக்கனைப் போன்றவர்களின் சிந்தனை, செயல், குணம் ஆகியவற்றில் ஒரு துளியாவது இப்போதுள்ள தலைவர்களிடம் இருக்கிறதா…
கக்கன் – ஒரு குறிப்பு:
1908-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி மதுரை மேலூருக்கு அருகே உள்ள தும்பையாபட்டியில் பிறந்தவர் பி. கக்கன். பள்ளி வயதிலேயே காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து பெரும் போராட்டங்களில் பங்கெடுத்தவர். தலித் மக்களுக்கு கோயிலில் நுழையும் உரிமை கேட்டு, ஆலயப் பிரவேசம் செய்தவர்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று அலிப்பூர் சிறையில் கொடும் அடக்குமுறையை அனுபவித்தவர். பெருந்தலைவர் காமராஜரின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தவர்.
1957-ல் பொதுப்பணித்துறை அமைச்சராக, காமராஜர் அமைச்சரவையில் பொறுப்பேற்றார். 1963 முதல் 1967 வரை சென்னை மாகாணத்தின் உள்துறை அமைச்சராக இருந்தவர்.  விவசாயம், ஆதி திராவிடர் நலத்துறை என பல துறைகளின் பொறுப்பு இவர் வசம் இருந்துள்ளது.
வைகை, மேட்டூர் அணைகளை உருவாக்கியதில் பெருந்தலைவர் காமராஜருக்கு அடுத்த பெருமை கக்கனுக்கு உண்டு.
மெரினாவில் இந்துக் கடவுள்களின் சிலைகளை, தனது எச்சரிக்கையையும் மீறி, தந்தை பெரியார் எரித்த போது, சற்றும் தயங்காமல் அவரைக் கைது செய்து சிறையிலடைத்தவர் கக்கன். தனிப்பட்ட தலைவர்களை விட சட்டம் – ஒழுங்கு முக்கியம் என செயல்பட்ட அவரை பின்னர் அதே பெரியார் பாராட்டியுள்ளார்.

பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு தேவையான வசதியை ஏற்படுத்தி தர

"பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு தேவையான வசதியை ஏற்படுத்தி தர தவறினால், அறவழிப் போராட்டம் நடத்தப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழை, எளிய மக்களின் மருத்துவச் சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளன. மருத்துவமனைகளின் பராமரிப்புக்கு அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டும், பல மருத்துவமனைகள் கண்டுகொள்ளப்படாமல் தான் உள்ளன. போதிய டாக்டர் பணியிடம், உபகரணங்கள் இல்லாதது உட்பட பல காரணங்களால், குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகளில் போதிய சிகிச்சை பெற முடியாமல் தவிக்கும் பலர், தனியார் மருத்துவமனைகளை நாடி கூடுதலாக செலவழிக்க வேண்டியுள்ளது. பந்தலூரில் செயல்படும் அரசு மருத்துவமனையும் இதில் இடம் பிடித்துள்ளது; பிரச்னைக்கு உரிய தீர்வு ஏற்படுத்தவில்லை என்றால் அறவழிப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பந்தலூரில் செயல்படும் மகாத்மா காந்தி பொது சேவை மைய அமைப்பாளர் நவுசாத், செயலர் சந்திரன் இணைந்து, முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள மனு: பந்தலூரில் செயல்பட்டு வந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பந்தலூர் தனி தாலுகாவாக பிரிக்கப்பட்ட பின், தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. 

ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்த போது பணிபுரிந்த 6 டாக்டர்கள், தரம் உயர்த்தப்பட்ட பின் மாறுதல் பெற்று சென்று விட்டனர்; பொதுமக்களின் வலியுறுத்தலுக்கு பின், ஒருவர் பணியமர்த்தப்பட்டார். மருத்துவமனையில் எக்ஸ்ரே, ஸ்கேன், ஈ.சி.ஜி., பிரிவுகள், அறுவை சிகிச்சை அரங்கு செயல்பாடின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ளது. தலா 40 படுக்கை வசதிகள் கொண்ட இரண்டு தளங்கள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டுள்ளதுடன், சவக்கிடங்கு, கவுன்சிலிங். பயோமெடிக்கல், கழிப்பறைகள், ஆம்புலன்ஸ் ஷெட் பயன்படுத்தாமல் பாழடைந்து வருகிறது.மாதந்தோறும் குடும்ப நல அறுவை சிகிச்சை மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பகலில் மட்டுமே பணியில் டாக்டர் உள்ளார். இரவில் டாக்டர் இல்லாததால், பந்தலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் அவசரச் சிகிச்சைக்கு, கேரளா மாநில தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டியுள்ளது.

காந்தி சேவை மையம் சார்பில், ரத்ததான முகாம் நடத்த முன்வந்தாலும், மருத்துவமனையில் அதற்கான ஒத்துழைப்பு மற்றும் வசதிகள் இல்லாததால், ரத்ததானம் அளிக்க முன்வருபவர்கள், முடியாமல் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது. எனவே, பந்தலூர் அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர் பணியிடத்தை நிரப்பவும், மகப்பேறு மருத்துவர் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், மகாத்மா காந்தி சேவை மையம் சார்பில் அமைதி வழி அறப்போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு நவுசாத், சந்திரன் கூறியுள்ளனர்.

மகாத்மா காந்தி புகழ் பெற்ற போட்டோ ஆல்பம்

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது மகாத்மா காந்தி மும்பையில் உள்ள கவாலியா டேங்க் மைதானத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அங்கு அவர் சத்தியா கிரக போராட்டத்தை அறிவித்தார். பிறகு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை தொடங்கினார். கர்நாடக மாநிலத்தில் நடந்த அந்த போராட்டத்தில் மகாத்மா காந்தி கலந்து கொண்டார்.
அப்போது எடுக்கப்பட்ட புகழ் பெற்ற போட்டோ ஆல்பம் லென்ஸ் மேன் ஆண்ட்ரு, நெய்ல் என்பவருக்கு 23 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனை செய்தார். நெய்ல் சென்னையில் உள்ள இந்திய மருத்துவ சேவை மையத்தில் பணியாற்றினார். மைசூர் மற்றும் தார் வாரில் பணிபுரிந்த சிற்ப கலைஞர்கள் பொருகன், டெய்லர்ஸ் ஆகியோருக்கு இவற்றை வழங்கியிருந்தார்.
அவற்றில் 21 போட்டோக்கள் மட்டும் லண்டனில் ஏலம் விடப்பட்டது. அவை ரூ.2 லட்சத்துக்கு ஏலம் போனது. அவற்றுக்கான ஏலத் தொகை ரூ.70 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால் எதிர்பார்த்ததை விட 2 மடங்கு அளவுக்கு ஏலம் போனது.

திங்கள், 7 மார்ச், 2011

உடல் உறுப்பு தானம்

கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமச்சந்திரா புரத்தில் வசிக்கும் தொழிலதிபர் சேகரின் மகள் அபிராமி(9). இவருக்கு, கடந்தாண்டு செப்டம்பர் 23ல், சென்னை முகப்பேரில் உள்ள, "பிராண்டியர் லைப் லைன்' மருத்துவமனையில், இதயேந்திரனின் இதயம் பொருத்தப்பட்டது. டாக்டர் செரியன் தலைமையிலான டாக்டர்கள், 45 நிமிடம் போராடி, சிறுமி அபிராமிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். தொடர்ந்து ஒரு மணி நேரம் சிறுமிக்கு இதய துடிப்பு, ரத்த அழுத்தம் உட்பட பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. தொடர் கண்காணிப்புக்குப் பிறகு சிறுமி அபிராமி, மீண்டும் சுட்டிக் குழந்தையாக இவ்வுலகை வலம் வந்தாள். இச்சம்பவத்திற்கு பிறகு, தமிழகம் முழுவதும் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பன்மடங்கு பெருகியது.


கடந்த மாதம் வரை பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்த அபிராமிக்கு, 10 நாட்களுக்கு முன், பழைய முறையிலான நோய் அறிகுறிகள் தென்பட்டன. உடனே, சென்னைக்கு வரவழைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து இரவு பகலாக டாக்டர்கள் அவளைக் கண்காணித்து வந்தனர். ஆனால், பொருத்தப்பட்ட இதயம் ஒத்துழைக்காததால், நேற்று முன்தினம் இரவு, சிகிச்சை பலனின்றி அபிராமி இறந்து போனாள். இடைவிடாத முயற்சியினால், அபிராமியின் உயிரை மீட்டெடுத்த அவளது பெற்றோருக்கு அவளது மரணம், பேரிடியாக இருந்தது. அதையும் அவர்கள் தாங்கிக்கொண்டு, கண்ணீரோடு, அபிராமியின் கண்களை எழும்பூர் கண் மருத்துவமனைக்கு தானமாக கொடுத்தனர். அன்று நள்ளிரவே அவளது உடலை பெங்களூரு கொண்டு சென்றனர். இறந்தும் கண்களை தானமாக விட்டுச் சென்ற அபிராமி, மீண்டும் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுவிட்டாள். ஆனால், அவளின் திடீர் மரணமோ, இதய மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட டாக்டர்கள் மற்றும் உறுப்பு தான விழிப்புணர்வாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.


உறுப்பு தானத்தை இயக்கமாக மாற்றிய இதயேந்திரன்: மாணவன் இதயேந்திரன் தானமாக வழங்கிய இதயம், ஓராண்டில் தனது துடிப்பை நிறுத்திக்கொண்டபோதும், தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வருவது அதிகரித்துள்ளது. மனித உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது தொடர்பாக மத்திய அரசு, 1994ம் ஆண்டு சட்டம் இயற்றியது. இச்சட்டத்திற்கு 1994ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி அப்போதைய ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார். இச்சட்டத்தின்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடிவு செய்தால், இரு நபர்கள் முன்னிலையில் எழுதித்தர வேண்டும். அந்த இரு நபர்களில் ஒருவர், உறவினராக இருக்க வேண்டும். 18 வயதுக்கு உட்பட்டோரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க, பெற்றோர் அனுமதி வழங்க வேண்டும்.


உடல் உறுப்பு தானத்தை வர்த்தகமயமாக்குவதைத் தடுக்கவும், சட்டத்தில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒருவரது உடல் உறுப்புகளை அனுமதியின்றி அகற்றுபவர்களுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. 2007ம் ஆண்டு தமிழகத்தில் சிறுநீரக கடத்தல் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசும் கடும் நடவடிக்கைகளை எடுத்தது. உறுப்புகளை தானமாக வழங்க முன்வருபவர்களுக்கு, டி.பி., போன்ற தொற்றுநோய்கள், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் இருக்கக் கூடாது. தானமாக வழங்கப்படும் உறுப்புகளை எடுக்கும்போது, டாக்டர்கள் இது குறித்து கவனமாக பரிசோதனை நடத்துகின்றனர். ரத்த வகை, உடல் உறுப்பின் அளவு ஆகியவற்றை பொறுத்து, ஒருவரது உடல் உறுப்புகள், மற்றொருவருக்கு பொருத்தப்படுகின்றன. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம்நாட்டில் உடல் உறுப்பு தானம் மிகவும் குறைவாக உள்ளது. 10 லட்சம் மக்கள் தொகையை அடிப்படையாக கொள்ளும்போது, ஸ்பெயினில் 32 பேர், அமெரிக்காவில் 21 பேர், போர்ச்சுக்கலில் 17 பேர், போலந்தில் ஆறு பேர், தாய்லாந்தில் ஒருவர் உடல் உறுப்பை தானமாக வழங்குகின்றனர். ஆனால் நம் நாட்டில், 10 லட்சம் மக்கள் தொகைக்கு 0.05 பேர் மட்டுமே தங்களது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வருகின்றனர். தேசிய சராசரியை விட அதிகமாக, தமிழகத்தில் 10 லட்சம் பேரில் 0.8 சதவீதம் பேர் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வருகின்றனர்.


சென்னையை அடுத்த திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த டாக்டர் தம்பதி அசோகன், புஷ்பாஞ்சலியின் மகன் இதயேந்திரன் (17) சாலை விபத்தில் சிக்கினான். டாக்டர்கள், இதயேந்திரனின் மூளை செயலிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவனது பெற்றோர், இதயேந்திரனின் இதயம், கண்கள், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர். இதற்காக இதயேந்திரனின் தாயார் புஷ்பாஞ்சலிக்கு தமிழக அரசு, கல்பனா சாவ்லா விருது வழங்கி கவுரவித்தது. இதயேந்திரன் பெற்றோரின் தியாகத்துக்குப் பிறகு, தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு அதிகரித்தது. துணை முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் தங்களது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர். துரதிர்ஷ்டவசமாக, இதயேந்திரனின் இதயத்தை தானமாக பெற்ற ஒன்பது வயது மாணவி, நேற்று முன்தினம் இரவு மரணமடைந்தார். மாணவன் இதயேந்திரன் தானமாக வழங்கிய இதயம் ஓராண்டில் தனது துடிப்பை நிறுத்திக் கொண்ட போதும், தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வருவது அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் 2008ம் ஆண்டு அக்டோபர் முதல் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் வரை, 120 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 76 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள், 31 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள், 13 இதய மாற்று அறுவை சிகிச்சைகள் அடங்கும். தமிழகத்தில் குறிப்பிட்ட சில மருத்துவமனைகளுக்கு மட்டுமே உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இதய மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ள, ஆறு மருத்துவமனைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள 48 மருத்துவமனைகளுக்கும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஐந்து மருத்துவமனைகளுக்கும், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள இரு மருத்துவமனைகளுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனைகளில் உடல் உறுப்புகள் தானமாக தேவைப்படும் நோயாளிகள் விவரங்கள், இணையதளம் மூலம் பதிவு செய்யப்படுகின்றன. உடல் உறுப்புகள் தானமாக கிடைக்கும் போது, பதிவு மூப்பு அடிப்படையில், அவை நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.


மாநிலம் முழுவதும் தானமாக வழங்கப்படும் உடல் உறுப்புகள் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், சென்னை பொது மருத்துவம�னையில் உள்ள உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்ட மையத்தில் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இம்மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அமலேர்பவநாதன் கூறுகையில், ""மாணவன் இதயேந்திரனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்ட பிறகு, தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதன்பிறகு, பலரும் தங்களது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்துள்ளனர்,'' என்றார்.


மாற்று இதயம் நீண்ட கால தீர்வா? நம் வாழ்நாளில் சராசரியாக 250 கோடி முறை இதயம் துடிக்கிறது. ஒருவர் உடலிலிருந்து இதயம் எடுக்கப்பட்டுவிட்டால், அது 4 - 6 மணி நேரத்துக்குள் இன்னொருவருக்கு பொருத்திவிட வேண்டும். இது ஆபரேஷன் நடக்கும் நேரத்தையும் உள்ளடக்கியது. கடந்த ஆண்டு செப்., 23ல் இதயேந்திரன் இதயம், பெங்களூருவைச் சேர்ந்த சிறுமி அபிராமிக்குப் பொருத்தப்பட்டது. இச்சிறுமி ஓர் ஆண்டுக்குள் உயிரிழந்துவிட்டார். பொதுவாக, முதல் ஐந்து ஆண்டுகளில், மாற்று இதயம் பெற்றவர்கள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துவிடுகின்றனர். மாற்று இதயம் பெற்றவர்களில் 81 சதவீதம் பேர் ஓர் ஆண்டும், 75 சதவீதம் பேர் மூன்று ஆண்டும், 68 சதவீதம் பேர் ஐந்து ஆண்டு வரையும் உயிர் வாழ்கின்றனர். 10 ஆண்டுகளுக்குள் 50 சதவீதம் மரணமடைந்துவிடுகின்றனர்.


இதயம் தொடர்பான நோய்களே, மரணத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. 1978ல் மாற்று இதயம் பெற்ற டோனி ஹியூஸ்மென் என்பவர், 31 ஆண்டு காலம் உயிர் வாழ்ந்து 2009 ஆகஸ்ட் 10ல் உயிரிழந்தார். 1967ல் தான் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை தென்னாப்ரிக்காவில் நடந்தது. 1994ல் இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. இந்தியாவில் ஆண்டுதோறும் 4 - 5 ஆயிரம் பேருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. ஆனால், 1994ம் ஆண்டிலிருந்து 2005ம் ஆண்டு வரை 43 பேருக்குத் தான் இதயம் மாற்றப்பட்டது. அமெரிக்காவில் ஆண்டுதோறும் 2,000 இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகின்றன. உலகம் முழுவதும் இந்த எண்ணிக்கை ஏறத்தாழ 3,000 ஆக உள்ளது

வெள்ளி, 4 மார்ச், 2011